விமர்சனம்

தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்

ராசி, நட்சத்திரம், சோதிடம் ஆகியனவற்றில் மூழ்கி இருக்கும் நாயகன் ஹரீஷ்கல்யாணுக்கு திருமணம் தாமதமாகிறது.

பார்க்கும் பெண்களிடமெல்லாம் ராசி ,நட்சத்திரம் கேட்பதால் பலரும் தெறித்து ஓடுகின்றனர்.

உடன்வேலை செய்யும் பெண் இவரை உருகி உருகி காதலித்தாலும் ராசிப் பொருத்தம் இல்லை என நிராகரிக்கிறார்.

அப்படிப்பட்டவருக்கு ஒரு காதல், அது முறிந்து போகிறது. காதல் போனால் சாதலா? இன்னொரு காதல் இல்லையா? எனவே மறுபடி ஒரு காதல் வருகிறது. அது என்னவாகிறது என்பதைச் சொல்வதுதான் படம்.

நாயகன் ஹரீஷ்கல்யாண், இளமைத் துள்ளலான வேடத்துக்குப் பொருத்தமாக இருக்க முயன்றிருக்கிறார்.நடிப்பில் முன்னேற்றம் தேவை. 
இறுதிக்காட்சியில் நாயகி ஆழ்ந்த காதல் தாங்க முடியா தவிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்தி உருக்கமாகப் பேசும் நேரத்தில் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தேமே என நிற்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் டிகான்கனாசூரியவன்ஷி அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். 

இன்னொரு நாயகி ரெபாமோனிகாவும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

ஹரீஷின் மாமாவாக நடித்திருக்கும் முனீஷ்காந்தை பெரியாரிஸ்டாகக் காட்டுகிறார்கள்.ஆனால் அதற்கான எந்த மரியாதையும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. வெறுமனே பிரியாணிக்கும் மதுவுக்கும் அலைபவராகக் காட்டியிருக்கிறார்கள்.

யோகிபாபு மூலம் படத்தின் கதையை விளக்குகிறார்கள்.நடிகராகவே வரும் அவர், படப்பிடிப்புத் தளத்திலிருந்து கொண்டு பேசுகிற வசனங்கள் அனைத்துமே திரைத்துறையின் மதிப்பைக் கெடுக்கும் வண்ணமே இருக்கின்றன.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை தாழ்வில்லை.
பி.கே.வர்மாவின் ஓளிப்பதிவு பளிச்சென இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் சஞ்சய்பாரதியின் போதாமை பல இடங்களில் வெளிப்படுகிறது.

அஸ்ட்ராலஜி அஷ்டானமி ஆகிய இருதுருவங்கள் கதையில் இருந்தும் திரைக்கதை அமைப்பில் அது வெளிப்படவே இல்லை. 

தனுசு ராசிக்கு நேரம் சரியில்லை.

Related Posts