சினிமா செய்திகள்

அறிவித்தபடி தனுஷ் படம் வெளியாகுமா? – படக்குழு பதட்டம்

தனுஷை கதாநாயகனாக வைத்து யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர்.அதோடு இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஒரு காணொலி பதிவு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

அந்த காணொலியை தனுஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனால் தனுஷ் இரசிகர்கள் உற்சாகமாக அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.

அதேசமயம், படக்குழுவிடம் அந்த உற்சாகம் இல்லை. ஏனென்று கேட்டால்? அனிருத் தான் காரணமாம். ஆம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் அனிருத்.

அதனால் இவர்கள் கூட்டணியை இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவித்தபின்னும் கூட பாடல்களை முழுமையாகக் கொடுக்கவில்லையாம் அனிருத். அதுமட்டுமின்றி, நான் சில வாரங்கள் வெளிநாட்டுப் பயணம் செல்லவிருக்கிறேன், அதை முடித்துவிட்டு வந்து இந்தப்படத்துக்குப் பின்னணி இசை அமைக்கிறேன் என்று சொல்கிறாராம்.

அவர் சொல்கிறபடி நடந்தால் ஆகஸ்ட் 18 ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்பில்லை. எனவே, படக்குழு பதட்டமாகி முன்பே வேலைகளை முடித்துக் கொடுக்கச் சொல்லி அனிருத்திடம் மன்றாடுகிறார்களாம். அனிருத் என்ன செய்ய நினைத்திருக்கிறாரோ?

Related Posts