சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – பேரரதிர்ச்சியில் திரையுலகம்

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘கைதி’ படத்திலும் தயாராகிக் கொண்டிருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

புதிய படமொன்றின் படப்பிடிப்புக்காக குமுளியில் இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. இன்று (அக்டோபர் 7) அதிகாலை 4.30 மணியில் திடீர் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

இவர், தமிழ்த் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தவர்.சில காலம் வடிவேலுவிடம் பணிபுரிந்து வந்தார். அப்போது வடிவேலு நடித்த படங்களில் அவருடன் இணைந்து காமெடி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கிருஷ்ணமூர்த்தி பிரபலமானார்.

தொடர்ச்சியாக வடிவேலுவும் தன்னுடைய நகைச்சுவை குழுவுக்கு வாய்ப்பு கொடுத்து வந்ததால், இவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பும் கிடைத்தது. ‘தவசி’ படத்தில் வடிவேலுடன் இணைந்து கிருஷ்ணமூர்த்தி செய்த காமெடி இப்போதும் தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது.

‘நான் கடவுள்’ படத்தில் கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்று. ‘மருதமலை’, ‘வேல்’ உள்ளிட்ட பல படங்களில் இவரது காமெடிக் காட்சிகள் பேசப்பட்டன.

இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், பிரசாந்த் மற்றும் கெளதம் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தியின் இந்த திடீர் மறைவு திரையுலகினரை பேரரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts