சினிமா செய்திகள்

திரையுலகினரை வெறுப்பேற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் – உண்மையை ஏற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதேன்?

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை. சனவரி மாதம் தமிழர்திருநாளையொட்டி வெளீயான மாஸ்டர் திரைப்படத்துக்கு மக்கள் அலையலையாக வந்தார்கள். அப்படம் தமிழகத் திரையரங்குகளில் மட்டும் சுமார் 140 கோடி வசூல் செய்தது என்கிறார்கள்.

அதன்பிறகு இரண்டுமாதங்களாகத் திரையரங்குகளில் பெரிய கூட்டம் இல்லை. அதற்கு முக்கியக் காரணம், திரையரங்குக் கட்டணங்கள் மற்றும் தின்பண்டங்கள் விலை ஆகியன என்பது.

திரையரங்குகளில் முன்புபோல் நான்குவகைக் கட்டணங்கள் என்றில்லாமல் எல்லாப்படங்களுக்கும் ஒரேமாதிரியான கட்டணம் என்பது, நேரில் போய் நுழைவுச்சீட்டு கேட்டால் கூட, உங்கள் கைபேசி எண் சொல்லுங்கள் என்று கேட்டு வாங்கி இணையத்தில் பதிவு செய்து அதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, முப்பது ரூபாய் மதிப்புள்ள சோளப்பொரியை முன்னூறு ரூபாய்க்கு விற்பது, குடிக்கநீர் கூட வைக்காமல் பத்து ரூபாய்க்கு விற்கும் குடிநீரை ஐம்பது ரூபாய்க்கு விற்பது ஆகிய காரணங்களால்தான் திரைய்ரங்குகளுக்குக் கூட்டம் வரவில்லை என்பது எதார்த்தம்.

இவற்றை திரையரங்கினர் கொஞ்சமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நேற்று, காட்ஸில்லா வெர்சஸ் காங் என்கிற ஆங்கிலத் திரைப்படம் வெளியானது. தமிழகம் முழுக்க சுமார் நானூறு திரையரங்குகளில் இப்படம் வெளியானது. நேற்று புதன்கிழமை, வேலைநாள் ஆகியனவற்றைத் தாண்டி தமிழகம் முழுக்க நல்ல கூட்டம் வந்திருக்கிறது.எல்லாத் திரையரங்குகளிலும் ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் பார்வையாளர்கள் வந்திருந்தனராம்.

உடனே, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்பிரமணியன், பார்த்தீர்களா? கூட்டம் வராததற்கு திரையரங்குக் கட்டணம், பாப்கார்ன் விலை ஆகியன காரணம் என்றீர்களே? இப்போது இந்தப்படத்துக்கு எப்படிக் கூட்டம் வந்தது? நீங்கள் நல்ல படம் எடுத்தால் கூட்டம் நிச்சயம் என்று சொல்லி திரையுலகினரை வெறுப்பேற்றுகிறார்.

எல்லா இருக்கைகளுக்கும் ஒரேமாதிரியான கட்டணம், பாப்கார்ன் விலை அதிகம் ஆகிய சிக்கல்கள் இல்லாவிட்டால், இப்படத்துக்கு எல்லாத் திரையரங்குகளும் நிரம்பி வழிந்திருக்கும் என்பதுதான் உண்மை.

இப்படத்தின் விளம்பரங்களை இணையத்தில் பார்த்துவிட்டு என் குழந்தைகள் இந்தப்படத்துக்குக் கூட்டிட்டுப்போங்கள் அப்பா என்று கேட்டும் என்னால் கூட்டிப்போக முடியவில்லை. ஏனெனில் நுழைவுக்கட்டணம் மற்றும் தின்பண்டங்கள் விலை அதிகம் ஆகியனதான்.

உங்களை யார் தின்பண்டங்கள் வாங்கச் சொன்னது? கட்டாயம் வாங்கவேண்டுமென நாங்கள் சொன்னோமா? என்று அபத்தமாகக் கேட்காதீர்கள். குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் கட்டாயம் கேட்பார்கள், வாங்கித்தரமுடியாமல் மனசு வலிக்கும். இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.

உங்கள் பொருளாதார நிலையிலிருந்தே எல்லோரையும் பார்க்காதீர்கள்.

– அன்பன்

Related Posts