விமர்சனம்

பூமராங் – திரைப்பட விமர்சனம்

விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றிய பெருமைகளையும் தற்காலத்தில் அவர்கள் படும் இன்னல்களையும் பேசுகிற படங்கள் நிறைய வரத்தொடங்கியிருக்கின்றன.

சிக்கல்களை மட்டும் சொல்லாமல் அதற்கு ஒரு தீர்வையும் சொல்ல வந்திருக்கிறது பூமராங்.

கால்பந்து விளையாட்டு வீரரான சிவா, தீ விபத்தொன்றில் சிக்குகிறார்.அவர் முகம் முழுக்க எரிந்து போய்விட, முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய முகம் பெறுகிறார்.

புதிய முகம் மட்டுமின்றி, உயிருக்கே ஆபத்து என்கிற அளவில் புதிய சிக்கலும் வருகிறது.

தன்னைக் கொல்ல வருகிறவர்களிடம் நான் அவனில்லை என்று சொல்லப்போகிற இடத்தில் நடக்கிற நிகழ்வுகள்தாம் படம்.

அதர்வா, மென்பொருள்துறை வாலிபர் மற்றும் விவசாயத்தைக் காக்கத் துடிக்கும் இளைஞர் ஆகிய வேடங்களில் அழகாகப் பொருந்துகிறார். துடிப்புடன் இருக்கிறார். கனமான பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

மேகா ஆகாஷுக்கும் அவருக்குமான காதல் கதை சுவாரசியம். ஒரு பாடல் சில காட்சிகள் என்கிற வேடமென்றாலும் ஈர்க்கிறார்.

இன்னொரு நாயகியாக இந்துஜா. விவசாயக் குடும்பப் பெண்களின் பிரதிநிதியாக வருகிறார்.

நகைச்சுவைக்கு சதீஷ் ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவர் இருக்கிறார்கள். இந்தப்படத்தில் கிடைத்த வேடத்தையும் வசனங்களையும் கொஞ்சம் விரிவு படுத்தி எல்.கே.ஜி என்கிற படத்தையே எடுத்துவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில், வெடித்துக் கிடக்கும் நிலங்கள் நெஞ்சம் பதற வைக்கின்றன. புழுதி பறக்க ஓரு பேருந்து வரும் காட்சியில் உள்ள நிலப்பரப்பு நடுங்க வைக்கிறது.

ரதனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பிருந்தாவின் நடன அமைப்பில் அதர்வா மேகா ஆகாஷ் வரும் பாடல் காட்சிக்கு நன்று.

கதாநாயகத்தன்மைக்குக் கொஞ்சமும் குறை வைக்காமல் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதில் தேவையான அளவு சமுதாயப் பொறுப்பையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

நீட் தேர்வு, பெருமுதலாளிகளின் ஆதிக்கம், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் ஆகியனவற்றை கூர்மையான வசனங்களிலும் தேவையான காட்சிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் குறைகள் இருந்தாலும் மக்களுக்கு நல்லனவற்றைச் சொல்லவேண்டும் என்கிற கண்ணனின் எண்ணம் போற்றுதலுக்குரியது.

Related Posts