September 22, 2019
செய்திக் குறிப்புகள்

பிகில் படத்துக்கு நிறைய கேஸ் வரும் – படைப்பாளன் விழாவில் பரபரப்புப் பேச்சு

இயக்குநர் தருண்கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் எல்.எஸ்.பிரபுராஜா.இவர், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ள படம் படைப்பாளன்.

எல் எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் வழங்கும் இப்படம், கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில், கலைப்புலி எஸ் தாணு,இசையமைப்பாளர் கிருபாகரன்,
இயக்குநர் சீனு ராமசாமி,பாடலாசிரியர் சினேகன்,
ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் மனோபாலா பேசும்போது….

சிநேகன் சார் பேசும்போது இப்படத்தின் கதை தெரியாது என்றார். நான் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும் தான் கதை தெரியாது. இந்த இயக்குநருக்காவது தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையைத் திருடுகிறார்கள். இந்தத் தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க.(தீபாவளி நாளில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் வெளியாகவிருக்கிறது) ஏன்னா நிறைய பேர் தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க. இந்த படைப்பாளன் வெற்றிபெறுவான் என்றார்.

இயக்குநர் பிரபுராஜா பேசியதாவது,.

இந்தப்படத்தைப் பற்றி நிறையப் பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்தப்படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதைய ரெடி பண்ண நீங்கள் தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனி காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது.

ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கணும். இந்தப்படத்தில் பல உண்மைகளைச் சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்தப்படத்தை எடுக்கவில்லை. இந்தப்படம் வெற்றியடைய பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்

எஸ்.திருநாவுக்கரசர் பேசியதாவது….

ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை.

இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்குக் கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்குக் கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம்.

அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார்.

அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.

படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும்.

இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். சம்பளங்களைக் குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கன்ல்சட் பண்ணலாம்.

சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக் கூடிய தொழில் இது. மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும். உன்னால் முடியும் தம்பி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts