October 29, 2020
Uncategorized செய்திக் குறிப்புகள்

இனத்துரோகியின் முகமாக நீங்கள் தோன்றவேண்டுமா? – விஜயசேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியவை நேற்று (அக்டோபர் 13) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது.

‘800’ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதனிடையே இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று உலகெங்கிலுமிருந்து விஜய்சேதுபதிக்குக் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதற்குக் காரணம், தமிழினப்படுகொலை செய்த இராஜபக்சே குடும்பத்தினரோடு முத்தையா முரளிதரன் நெருக்கமாக இருப்பதும் அவர்களுக்காகத் தேர்தல் பரப்புரை செய்ததும்தான்.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல் இந்தப்படத்தில் நடிப்பதற்காக விஜய்சேதுபதியை, இராஜபக்சே மகன் புகழ்ந்து பேசினார்.

இதனால் தமிழகம் மட்டுமின்றி உலககெங்கும் உள்ள தமிழர்கள் இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்குக் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில்….

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,

வணக்கம்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும், கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?

எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்

இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

800 – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம். இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள்.

துரோகிக்குத் துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை உங்கள் அறியாமையைக் கண்டு சிரிப்பாதா? அனைத்துத் துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிப்பாருங்கள். பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால், அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு, காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை, உலகரங்கில் எடுக்க முன் வா… ஒட்டு மொத்தத் தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாகப் பணியாற்றக் காத்திருக்கோம்.

நன்றி

இயக்குநர் பாரதிராஜா
15:09:2020

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Related Posts