விமர்சனம்

அயோக்யா – திரைப்பட விமர்சனம்

ஒரு தப்பான காவல்துறை அதிகாரி மனம் மாறி நல்லது செய்ய முடிவெடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதுதான் அயோக்யா.

ஃபிட்டான உடல், ஸ்டைலான நடை, அலட்சிய உடல்மொழி என்று கேடுகெட்ட காவல்துறை அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் விஷால்.

நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று விஷாலுக்குத் தோன்றியிருக்கும் போல. தொடக்கத்திலிருந்து திருட்டு பொய் பித்தலாட்டம் என எல்லா வேலைகளையும் செய்கிறார்.

ஒரு பிணத்தை வைத்து முப்பது இலட்சம் சம்பாதிப்பது தொடங்கி காட்சிக்குக் காட்சி பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்.

பார்த்திபனிடம் சண்டை போட்டுவிட்டு அது தப்பு என உணர்ந்து பேசும் காட்சியில் விஷாலின் நடிப்பு பேசப்படும்.

வழக்கமான நடிப்பாக இருக்கக்கூடாது என்பதற்காக எப்போதுமே உச்சஸ்தாயியில் பேசிக்கொண்டிருப்பது பல இடங்களில் பொருந்தவில்லை.

விஷாலுக்கு நேரெதிரான குணம் கொண்ட தலைமைக் காவலர் கே.எஸ்.ரவிக்குமார். நன்மையும் தீமையும் ஒரே இடத்தில் இருக்கின்றன என்று சொல்லப்படுவது போல எல்லாக் காட்சிகளிலும் விஷாலும் இவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள்.

உயரதிகாரி என்ற போதும் கலங்காமல் உறுதியாக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் வேடம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதற்கு நியாயமாக நடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

வில்லனாக வருகிற பார்த்திபன், இதெல்லாம் உள்ளே வெளியேவிலேயே நான் செய்துவிட்டேன் என்கிற அலட்சியத்துடனே விஷாலை எதிர்கொள்கிரார். இருவரும் வரும் காட்சிகளில் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் நடிப்புப் போட்டியில் விஷாலை முந்திச் செல்கிறார் பார்த்திபன்.

அவங்கம்மாவுக்குக் குழந்தை பிறந்திருக்காம் அப்ப அவன் அங்கதான இருக்கணும் எனும் அப்பாவி அமைச்சராக நடித்திருக்கும் சந்தானபாரதி சிறப்பு.

ஓரிரு காட்சிகளில் வந்தாலும் தன் இருப்பைப் பதிவு செய்து சிரிக்கவைக்கிறார் யோகிபாபு.

நாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா தான் கதையின் திருப்புமுனை. விஷாலைக் காதலோடு பார்க்கும்போதும் கடைசிக் காட்சியில் கதறி அழும்போதும் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

பூஜாதேவரியாவின் வேடமும் நடிப்பும் சிறப்பு. பாதிக்கப்படும் பெண்களின் பிரதிநிதியாய்ப் பொங்கியிருக்கிறார்.

கார்த்திக்கின் ஒளிப்பதிவு விஷாலுக்கும் படத்துக்கும் பலம்.

சாம்.சி.எஸ் ஸின் இசையில் பாடல்கள் சோபிக்கவில்லை. பின்னணி இசை பொருத்தமாக இருக்கிறது.

வேற்றுமொழிக்கதை என்றாலும் அதைத் தமிழகச் சூழலுக்கு ஏற்பப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்மோகன். திரைக்கதை அமைப்பும் வசனங்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

கெட்டவராக இருக்கும் விஷால் பேசும் வசனங்கள் எல்லாம் சரியே என்று சாதாரண மக்களை நினைக்க வைத்துவிடுவது இயக்குநரின் எழுத்து வலிமைக்குச் சான்று.

படத்தின் இறுதிக்காட்சி நீதிப்படியும் தர்மப்படியும் தவறானது.
ஒரு கெட்டவன் திருந்தினாலும் செத்துத்தான் ஆகவேண்டும் என்றால் அது சரியா?

குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை அதுவும் 24 மணி நேரத்தில் என்பது இயக்குநரின் முடிவு.

சட்டப்படி அது சாத்தியமே இல்லை என்பதோடு ஒரு வழக்கைத் தொடுத்த காவல் அதிகாரி, அதே வழக்கில் நானும் குற்றவாளி என்று சொல்வதும் அதை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொள்வதும் அபத்தம்.

ஆனால், இந்த அபத்தத்தைக் கணக்கில் கொள்ளாமல்,,

பொள்ளாச்சியிலிருந்து வெளியான காணொலியில், அண்ணா பிளீஸ் விட்டுருங்கண்ணா என்று கதறிய பெண்ணுக்கு அப்பெண்ணின் மனம் சாந்தமடையும் வகையில் நியாயம் கிடைத்தால் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி.

Related Posts