February 17, 2020
சினிமா செய்திகள்

தர்பார் இந்தியன் 2 விஜய் 64 – தமிழின் மிகப்பெரிய படங்களில் அனிருத்

தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோர். ரஜினி நடிக்கும் தர்பார், கமல் நடிக்கும் இந்தியன் 2, விஜய் நடிக்கும் விஜய் 64 ஆகிய படங்களின் இசையமைப்பாளர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் அனிருத்.

இன்று இருபத்தொன்பது வயதை நிறைவு செய்யம் இவர் தன்னுடைய 21 ஆவது வயதில் தமிழ்த் திரையுலகுக்குள் இசையமைப்பாளராக நுழைந்தார். 

இவருடைய முதல்பாடல் ஒய் திஸ் கொலவெறி. உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் பாடலைக் கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அதனால் அடுத்தடுத்து ஏறுமுகம்தான் அவருக்கு.
எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் ஆகிய அவருடைய அடுத்தடுத்த படங்களின் பாடல்களும் இளைஞர்களைக் கொள்ளை கொள்ள சம்பள விசயத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஹாரிஸுக்கு இணையாக வந்தார்.

அதற்கடுத்து தனுஷ், சிவகார்த்திகேயன்,விஜய், அஜீத், விஜய்சேதுபதி,சூர்யா என எல்லாப் பெரிய நாயகர்களின் படங்களுக்கும் இசையமைப்பாளர் ஆனார்.

எல்லாப்படங்களின் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றவை என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க செய்தி.

ரஜினி மனைவி லதாவின் உறவினர் என்றபோதும் இந்த வெற்றிகளை அடுத்து தகுதி அடிப்படையிலேயே ரஜினி படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமானார்.
 
இவர் இசையில் வெளியான ரஜினியின் பேட்ட பட பாடல்கள் பெரிய வெற்றி பெற்றன.

அதற்கடுத்து தற்போது தர்பார் இந்தியன் 2 விஜய் 64 ஆகிய தமிழின் பெரிய படங்களின் இசையமைப்பாளராக இருக்கிறார்.

இடையில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் அவரது கதவுகளைத் தட்டிய போதும் அதற்கு மயங்காமல் தன் இசை மூலம் ரசிகர்களை மயக்கி வருகிறார்.

1990 அக்டோபர் 16 இல் பிறந்த அவர், இன்று தன்னுடைய முப்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

– அ.தமிழன்பன் 

Related Posts