Uncategorized சினிமா செய்திகள்

அடுத்தடுத்து 5 முக்கிய படங்களை வெளியிடும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் – திரையுலகில் பரபரப்பு

இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளீயிட்டுள்ளது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம்.

இதற்கடுத்து ஏப்ரல் 28 ஆம் வெளியாகவுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனமே பெற்றுள்ளது.

அதன்பின் மே 6 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் கூகுள்குட்டப்பா. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் முக்கிய வேடத்தில் நடித்துத் தயாரித்துள்ள இந்தப்படத்தையும் ரெட்நிறுவனமே வெளியிடவிருக்கிறதாம். இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

இதற்குப் பின்னால், மே 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் படம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையையும் ரெட்ஜெய்ண்ட் நிறுவனமே பெற்றிருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு வெளியான அறிவிப்பின்படி, உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தையும் ரெட்ஜெயண்ட் தான் வெளீயிடும் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.

இவற்றிற்கடுத்து, ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் கமல், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகிறது. அதையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் ஏப்ரல் 28, மே 6, மே 13, மே 20, ஜூன் 3 ஆகிய அடுத்தடுத்த வாரங்களில் ஐந்து முக்கிய படங்களை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்பது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாக இருக்கிறது.

Related Posts