சினிமா செய்திகள்

அஜீத் படம் தயாரிக்க வந்தவர் இயக்குநரானார்

உண்மை நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கிவிட்டன. நிஜ சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.

இவர் எழுதி இயக்கியிருக்கும் படம் என்றாவது ஒரு நாள். விதார்த், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதைப் படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது.

தண்ணீர்ப் பஞ்சம், குழந்தைத் தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

இந்தியாவின் கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றி கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணவுள்ளோம். அங்குள்ள வட்டார மொழியைப் பேசி அனைத்து நடிகர்களும் நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன்,படத்தொகுப்பாளராக மு.காசி விஸ்வநாதன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல்பார்வையை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப்படத்தின் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி வேறுயாருமல்ல. சென்னை முன்னாள் மேயர் சைதைதுரைசாமியின் மகன்.

இவர் நடிகர் அஜீத்தின் நண்பர். அவரை வைத்துப் படமெடுக்கும் ஆர்வத்தில் திரைத்துறைக்குள் வந்தார். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.

அதன்பின் வேறு சில படங்களைத் தயாரிக்க முன்வந்தார். அவையும் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

இந்நிலையில் திரையுலக அனுபவங்களை வைத்து அவரே இயக்குநராவது என்று முடிவு செய்துவிட்டார். அதன் விளைவாக இந்தப்படம் தயாராகியிருக்கிறது.

Related Posts