September 18, 2020
சினிமா செய்திகள்

ரஜினி தனுஷ் ஆகியோரை பார்த்து பிரமித்தேன் – நடிகர் கஜராஜ் பேட்டி

2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கஜராஜ். இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் தந்தை என்பது இவருக்குக் கூடுதல் அறிமுகம்.

பீட்சா படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் வெளியான பொன்மகள்வந்தாள் படத்தில் பார்த்திபனுக்கு முன்பாக ஜோதிகாவுடன் நீதிமன்றத்தில் மோதுகிற வழக்குரைஞர் வேடத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அவருடன் ஓர் உரையாடல்….

•பொன்மகள்வந்தாள் படத்தில் நடித்த அனுபவம்?
அந்த நீதிமன்றக் காட்சியில் பாக்யராஜ் சார் ஜோதிகா மேடம் பாண்டியராஜன் சார் பிரதாப்போத்தன் சார் ஆகிய அனைவருமே லெஜண்ட்ஸ். அவர்களுடன் நடிக்கும்போது உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.ஆனால் எல்லோரும் என்னிடம் இயல்பாக உரையாடியதால் நன்றாக நடிக்கமுடிந்தது.

•இப்படம் ஓடிடியில் வெளியானதால் ரீச் இருந்ததா?
என்னுடைய நண்பர்கள் உட்பட ஏராளமானோர் பேசினார்கள்.திரையரங்கில் வெளியானால் என்ன வரவேற்பு கிடைக்குமோ அப்படியே இருந்தது.

•இப்போது நடிக்கும் படங்கள்..?
தனுஷுடன் ஜெகமேதந்திரம் உட்பட பல படங்களில் நடித்து முடித்துவிட்டேன். எஸ்.பி.சரண் இயக்கும் அதிகாரம் என்கிற வெப்சீரிஸ் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்கவேண்டியிருக்கிறது.

•தனுஷுடன் நடித்த அனுபவம்?
அவருக்குள் சினிமாக்கலை ஊறியிருக்கிறது. எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் கடினமான காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கில் முடித்துவிடுகிறார். அசுரன் படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து பிரமித்திருந்தேன். ஜெகமே தந்திரம் படத்தில் அவருடனே நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

•கார்த்திக்சுப்புராஜின் அப்பா என்பது பலமா?பலவீனமா?
பலம்தான். எல்லாப் படப்பிடிப்புத் தளங்களிலும் எனக்குக் கூடுதல் மரியாதை கிடைக்கிறது.

•நடிகராக இருப்பது எப்படி இருக்கிறது?
50 வயதுக்கு மேல்தான் நடிக்கவே வந்தேன். மீசைய முறுக்கு, அடங்க மறு ஆகிய படங்கள் பெரிய அடையாளம் கொடுத்தன. இந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே, கன்னிமாடம், கல்தா ஆகிய படங்களில் எனக்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதையெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் முன்பே நடிக்க வந்திருக்கலாமே என்கிற எண்ணம் இருக்கிறது..

•கபாலி, பேட்ட ஆகிய ரஜினி படங்களில் நடித்தது பற்றி..?
அவர் எவ்வளவு பெரிய ஸ்டார். எவ்வளவு ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போதும் நடன இயக்குநர் ஒரு டான்ஸ் மூவ்மெண்ட்டை சொல்லிக் கொடுத்தால் உடனே தனியாகப் போய் ஆடிப்பார்க்கிறார். எல்லாவற்றையும் ஒரே டேக்கில் ஓகே செய்கிறார். அது மிகவும் ஆச்சரியப்படத்தக்க விசயம்.

•நடிகரான பின்பும் சென்னையில் குடியேறாமல் மதுரையிலேயே தங்கியிருப்பது ஏன்?
எனக்கு ஃபார்மா பிஸினஸும் இருக்கிறது. அதையும் பார்த்துக் கொண்டே நடித்துக் கொண்டிருப்பதால் மதுரையைவிட்டு வர முடியவில்லை.

– செல்வன்

Related Posts