September 18, 2021
செய்திக் குறிப்புகள்

இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி

இந்திய சுதந்திரதின 75 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15 இலிருந்து தொடங்குகிறது.

கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5 இலிருந்து தொடங்குகிறது.

இந்திய சுதந்திரப் போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

50 ஆவது சுதந்திர தினவிழாக் கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து வரிகளில் பரத்பாலா இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

வரும் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பெருங்காற்றே என்ற பெயரில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.

தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, மராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்தப் பாடல் உருவாகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்படக் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ்(Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது.

தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர்கள் வரைகிறார்கள். இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -ல் பதிவு செய்யப்போகிறோம்.

இந்தப் பாடலின் முதல்பார்வை மற்றும் சலனப்படம் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5 இல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

இவ்விழாவில், வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.

வ.உ.சி-யின் 150 ஆவது ஆண்டைக் குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குத் தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906 இல் எழுதப்பட்டது. வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இலண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து ( நூலகர் மற்றும் ஆய்வாளர் ரங்கையா முருகன்) தமிழில் தமிழ்பெருஞ்சொல் வ.உ.சி. என்றும் ஆங்கிலத்தில் தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.என்றும் வெளியிடவிருக்கிறார்கள்.

இவையனைத்தும் ஒலிப் புத்தகமாகவும் (AUDIO BOOK ), காணொலிப் புத்தகமாகவும் (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KIDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக இணையத்தில் பதிவேற்றவிருக்கிறார்கள்.

மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.

விஷால் நயன்தாரா நடித்த சத்யம், ஜெயப்பிரதா மகன் சித்து ஹன்சிகா நடித்த உயிரே உயிரே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ஏ.ராஜசேகர் இப்போது ஓரு இந்திப்படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார். இதற்கிடையே இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் முன் களத்தில் நின்ற தமிழர்களை வட இந்திய மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் அரிய முயற்சியை முன்னெடுக்கிறார்.

இதனால் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Related Posts