January 23, 2021
சினிமா செய்திகள்

இந்தப்படத்துக்கு இசையமைக்கமாட்டேன் – ஏ.ஆர்.ரகுமான் மறுப்பு

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் மொழி மாற்று உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தப் படத்தின் இயக்குநராக மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பல காரணங்களால் அவர் மாற்றப்பட்டார்.

அதன்பின், இந்தப்படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தால் பெரும் கவனத்தை ஈர்க்கும் என்றெண்ணி அவரை அணுகினாராம் நடிகர் தியாகராஜன்.

பெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்பதோடு படத்தில் பத்துப் பாடல்களுக்கான இடங்கள் இருக்கின்றன என்பதாலும் ஏ.ஆர்.ரகுமான் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் தியாகராஜன்.

ஆனால், இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் மறுத்துவிட்டாராம். மொழிமாற்றுப் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.

இதனால் தியாகராஜன் பிரசாந்த் ஆகியோர் கடும் ஏமாற்றமடைந்துள்ளனராம்.

Related Posts